சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

தேர் கட்டுமான பணிகள்

சித்திரை திருவிழாவையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவிலில் திருமழிசை ஆழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்து உள்ளார். அவரது வேண்டுகோளின் படி உத்தானசாயி கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோவில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இதனால் இங்கு சொர்க்க வாசல் என்ற ஒன்று தனியாக கிடையாது.

பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டதால், 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த வைணவ கோவிலாக இந்த கோவில் போற்றப்படுகிறது. இந்த கோவிலின் ராஜகோபுரம் 171 அடி உயரம் கொண்டது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவில் சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.

எண்கோண வடிவில் அமைந்த இந்த தேர், 7 அடுக்குகளை கொண்டது. சுமார் 30 அடி நீளமும், சுமார் 11 அடி அகலமும் கொண்ட 4 குதிரைகள் தேரை இழுத்து செல்வது போல் அமைக்கப்படும். இந்த தேரை இழுப்பதற்கு 4 வடங்கள் பொருத்தப்படும். சித்திரை தேரோட்டம் இவை ஒவ்வொரு வடமும் சுமார் 400 அடி நீளமும், 21 அங்குலம் சுற்றளவும் கொண்டது. ஆகும். அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 103 அடி உயரம் ஆகும். இந்த தேரின் மொத்த எடை அலங்காரத்திற்கு முன்பு 350 டன்னும், அலங்காரத்திற்கு பிறகு 500 டன் எடையும் கொண்டுள்ளது.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில், தை முதல் நாளில் தைத்தேரோட்டமும், சித்ரா பவுர்ணமியில் சித்திரை திருவிழா தேரோட்டமும் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேரோட்டம் வருகிற 23-ம்தேதி சித்ராபவுர்ணமி நாளில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் நடக்கிறது. இதற்கான கொடியேற்ற விழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி தேர் பந்தல் கால் முகூர்த்தம் நடந்தது. தொடர்ந்து கொத்தனார் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தேர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தேர் கட்டுமான பணியில் ஈடுபடுபவர்கள் கூறுகையில், இந்த தேர் மிகவும் பிரசித்த பெற்றது ஆகும். தேர் கட்டுமான பணிகளுக்கு சுமார் 80 டன் சவுக்கு மரக்கம்புகளை பயன்படுத்துகிறோம். திரை சீலையானது 49 அடி பரப்பரளவு ஆகும். தேரை குதிரை இழுத்து செல்லும் வகையில் கட்டுமானம் செய்யப்படுகிறது. தற்போது தேருக்கான குதிரையும் கோவில் வளாகத்திலேயே சீரமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 1 வாரமாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 50-க்கும் மேற்பட்டவர்கள் 1 நாளைக்கு 10 பேர் என வேலை பார்த்து வருகிறோம். பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் முடிந்து தேரோட்டத்திற்கு தயாராக்கி விடுவோம் என்றனர்.

Tags

Next Story