சசிகலாவை சிறைக்கு அனுப்பியது மோடி- தங்க தமிழ்ச்செல்வன்
சசிகலாவை சிறைக்கு அனுப்பியது பா.ஜ.க அரசு, மோடிதான் என தேனி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.
மதுரை, உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளான ஏ.ராமநாதபுரம், செம்பட்டி, கட்டத்தேவன்பட்டி, கள்ளபட்டி, தும்மகுண்டு, சிந்துபட்டி, மேட்டுப்பட்டி, நாட்டாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேனி பாராளுமன்ற திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “மக்கள் எனக்கு அளிக்கும் வரவேற்பு மூலம் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்” என்றவர்,“நயினார் நாகேந்திரனின் பணம் பறிமுதல் செய்யப்பட்டது” குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,”எங்க பக்கமெல்லாம் ஒரு லட்ச ரூபாயைப் பிடித்தால் நூத்தியெட்டு இடங்களில் ரெய்டு செய்யும் வருமான வரித்துறை, அதே போன்று இந்தச் சம்பவத்திலும் எல்லா இடங்களிலும் சோதனை நடத்தி மேலும் பணத்தை பிடிப்பார்களா?””உங்களை எதிர்த்து போட்டியிடும் தினகரன் உங்களுக்கு குரு என்று சொல்லப்படுகிறதே?” என்ற கேள்விக்கு,“எனக்கு எதிராக போட்டியிடுபவர், எனக்கு குருவும் கிடையாது, நான் சிஷ்யனும் கிடையாது. நான் தினகரனால் எம்.எல்.ஏ பதவியை இழந்தவன், அதனால், அவருக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
ஜெயலலிதா இறக்கும்போது ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தார். எதற்கு அவரை கூப்பிட்டு அரட்டி, மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கினார் தினகரன்… வாங்கியதுமே கட்சி உடைந்தது. தர்ம யுத்தம் நடத்தினார் ஓ.பி.எஸ்.தினகரன், பன்னீர்செல்வம், பழனிசாமி என கட்சி மூன்று அணியாக மாறியது, மூன்றாக உடைத்தது தினகரன். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என நினைத்தார் தினகரன், முடியவில்லை.சசிகலாவை சிறைக்கு அனுப்பியது பா.ஜ.க அரசு, மோடிதான் அனுப்பினார். இரட்டை இலை சின்னம் பெற பணம் கொடுத்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. பணம் வாங்கியவர் இன்றும் திகார் சிறையில் உள்ளார், தினகரன் மட்டுமே வெளியே வந்துள்ளார். சிறையில் தள்ளியது பா.ஜ.க-தானே, அப்போதெல்லாம் வீராப்பாக பேசிய தினகரன், இப்போது ஏன் பா.ஜ.க-வுடன் சேர்ந்து தேனி தொகுதியில் நிற்கிறார். எந்த பலத்தில் அவர் வெற்றி பெற முடியும்?