வளர்ச்சி திட்ட பணிகளில் திருப்தி - வேல்முருகன் எம்.எல்.ஏ

வளர்ச்சி திட்ட பணிகளில் திருப்தி -  வேல்முருகன் எம்.எல்.ஏ

வேல்முருகன் எம்.எல்.ஏ 

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் திருப்திகரமாக உள்ளது. 50 சதவீத பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி அரசு மருத்துவமனை, திருப்பூர் பெருச்சிபாளையம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள கோவில் வழி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் திருப்பூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருவதாகவும் , அவைகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது. எந்தவித கண்டிப்போ , எச்சரிக்கையோ விடுக்கும் அளவிற்கு திருப்பூரில் நிலைமை இல்லை எனவும், மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் சிறப்பாக கையாண்டு வருவதாகவும் தெரிவித்தார். பல்வேறு இடங்களில் பாலம் மற்றும் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு ஒன்றிய அரசிடன் நிதி கேட்டு கோப்புகள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு முன்பு அளித்த வாக்குறுதிகள் 50 சதவீதம் நிறைவடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். ஆய்வு கூட்டத்தின் போது அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் , சட்டமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி ஆணையாளர் , மேயர் அனைத்து அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story