ஆற்று மீன்களுக்கு தட்டுப்பாடு : கூடுதல் விலைக்கு சந்தையில் விற்பனை

ஆற்று மீன்களுக்கு தட்டுப்பாடு : கூடுதல் விலைக்கு சந்தையில் விற்பனை

ஆற்றில் மீன் பிடிப்பு 

ஆறுகளில் நீர்வரத்து இல்லாததால் மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மீன் வரத்து குறைந்துள்ளதால் கூடுதல் விலைக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் காவிரிநீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மட்டுமின்றி மீன்பிடித் தொழிலும் இருந்து வருகிறது. ஆறுகளில் வரும் தண்ணீர் ஏரிகளிலும், குளங்களிலும் நிரப்பப்படும். அவ்வாறு நீர் நிரப்பப்பட்ட ஏரிகளிலும், குளங்களிலும் ஆற்றிலிருந்து வரும் தண்ணீரோடு சேர்ந்து வரும் மீன்களும் வருவதால் அவை குத்தகைக்கு விடப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

அதுமட்டுமின்றி ஆறுகளிலும், சிறு கால்வாய்களிலும் அப்பகுதி சிறு வியாபாரிகள் வலைவிரித்து மீன்பிடித்து ஆற்றங்கரை ஓரத்திலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தரைக்கடைகள் அமைத்து விற்பனை செய்வது வழக்கம். இன்னும் சிலர் கூடைகளில் மீன்களை எடுத்துச்சென்று தெருக்களிலும், சந்தைகளிலும் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். ஆறுகளில் பிடிக்கப்படும் பனையேறிக்கெண்டை, முள்கெண்டை, கெளுத்தி, கொரவை, விரால், விலாங்கு, ஆரா தேளிமீன், ஆத்துவளை, கண்ணாடி கெண்டை, ரோகு, கட்லா, வாளைமீன், அயிரை, வெளிச்சி, கெண்டைப் பொடி போன்ற மீன்கள் வளர்ப்பு மற்றும் கடல்மீன்களை விட ருசி மிகுந்தவை என்பதால் ஆற்று மீன்களுக்கான தேவை எப்போதுமே இருக்கும்.

ஆனால், ஆறுகளில் தற்போது தண்ணீர் வரத்து இல்லாததால், ஆறுகளில் மீன்பிடித் தொழில் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், கடைகளிலும், மார்கெட்டிலும் வளர்ப்பு மற்றும் கடல் மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படும் ஓரிரு வகை ஆற்று மீன்கள் அதன் சராசரி விலையைவிட கூடுதல் விலைக்கே சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. தஞ்சாவூரில் குறிப்பாக விரால் மீன்கள் கிலோ ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து இல்லையெனினும் சந்தைகளில் ஆற்று மீன்களுக்கான தேவை அதிகமாகவே உள்ளது.

Tags

Next Story