பள்ளி மற்றும் அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து : 9 பேர் பலத்த காயம்

ஒசூர் அருகே பள்ளி மற்றும் அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதிய விபத்து உண்டானது; டிரைவர் உட்பட 9 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

ஓசூர் அருகே பாகலூர் சாலையில் ஓசூரில் இருந்து பாகலூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி பேருந்தும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநர்கள் 2 பேர் உட்பட மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஓசூரில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு தனியார் பள்ளி பேருந்து ஒன்று ஒசூர் பாகலூர் சாலையில் மாரச்சந்திரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கர்நாடக மாநிலம் மாலூரில் இருந்து பாகலூர் சாலையில் ஓசூர் நோக்கி வந்த அரசு பேருந்து தனியார் பள்ளி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. 2 பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் பெல்லப்பாவுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

அதேப்போல அரசு பேருந்தின் ஓட்டுநர் பாலசந்தருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். பள்ளி பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். அனைவரையும் மீட்ட பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story