பள்ளி விடுமுறை : பெற்றோருக்கு ஆட்சியர் அறிவுரை
ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீப நாட்களில் வெயிலின் தாக்கம் சேலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் மேற்குறிப்பிடப்பட்ட நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடன் கண்காணித்துக்கொள்ள வேண்டும். விடுமுறை காலங்களில் ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியாமல் இறங்குவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆபத்தான நீர் நிலைகளில் விளையாடாமல் இருப்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள சூழ்நிலையில் தாகம் ஏற்படாவிட்டாலும் கூட தேவையான அளவு குடிநீர் அருந்த வேண்டும். கோடைகால பழங்களான நுங்கு, இளநீர், வெள்ளரி, தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை பழச்சாராகவோ அல்லது நேரடியாகவோ உடலுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.