நாமக்கல்லில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்கள் மாநாடு

நாமக்கல்லில் நடந்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்கள் மாநாட்டில், எம்.பி., ராஜேஸ்குமார் பங்கேற்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாடு – 2024–ல், 32 பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர்களுக்கு சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாடு–2024 ல், 32 பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர்களுக்கு சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, பேசியதாவது... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வியை கருத்தில் கொண்டு, காலை உணவுத்திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அரசுப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு அரசுப்பணி தேர்வில் ஒதுக்கீடு வழங்கி உள்ளார்.

ஒன்றிய அளவில், வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி கலையரசி, கலையரசன் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மகாகவி பாரதியார் ”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” கூற்றுப்படி, அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் வயிற்று பசியினை போக்கிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தினார். அரசு பள்ளியில் படிப்பது பெருமை ஆகும். எனவே, அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் செயல்படவேண்டும். 2023-24 ஆம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 32 பள்ளிகளின் சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கபட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பது அனைவரின் கடமையாகும் என இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்தார். இம்மாநாட்டில் முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரா.ரவிச்சந்திரன் (இடைநிலைக் கல்வி), ஆ.பாலசுப்ரமணியன் (தொடக்கக் கல்வி), பொ.கணேசன் (தனியார் பள்ளிகள்), ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் இரா.பாஸ்கரன், மாவட்ட தொடக்கக்கல்வி உதவித் திட்ட அலுவலர் ஆ.குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story