மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
மாணவன் அருண்குமார்
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே ஆடையூர் ஊராட்சி கன்னியாம்பட்டி அருகே மாரியம்மன் கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 41), மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு நவீன்குமார் (16), அரவிந்த் என்ற அருண்குமார் (15) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அருண்குமார் தற்போது ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்ந்துள்ளான். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் அருண்குமார் வீட்டில் இருந்துள்ளான்.
நேற்று முன்தினம் மாலை அருண்குமாரின் தாத்தா குப்புசாமி அருகில் உள்ள தோட்டத்தில் இருக்கும் மின் மோட்டாரை போடும்படி அருண்குமாரிடம் கூறியுள்ளார். அருகில் உள்ள மின்மோட்டார் அறைக்கு சென்ற அருண்குமார் மின் மோட்டாரை இயக்க முயன்றுள்ளான். நீண்ட நேரம் ஆகியும் குழாயில் தண்ணீர் வராததால் குப்புசாமி மின்மோட்டார் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அருண்குமார் மயங்கி கிடந்துள்ளான். அவனை காப்பாற்ற முயன்ற குப்புசாமியையும் மின்சாரம் தாக்கி உள்ளது. அவர் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மின்சாரத்தை துண்டித்து, அருண்குமாரை மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பூலாம்பட்டி போலீசார் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின் மோட்டாரை இயக்கச் சென்ற பள்ளி மாணவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.