கழிப்பறை வசதி வேண்டி பள்ளி மாணவர்கள் போராட்டம்

உளிமங்கலம் கிராம பள்ளியில் 70 ஆண்டுகளாக கழிப்பறை வசதி இல்லாதநிலையில், கழிப்பறை வசதி வேண்டி பள்ளி மாணவர்கள் போராட்டம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அரசுப்பள்ளியில் கடந்த 70 ஆண்டுகளாக கழிவறை கட்டப்படாமல் உள்ளது. கழிவறைகள் இல்லாததால் தினந்தோறும் மாணவ மாணவியர்கள் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கழிவறை இல்லாததால் மாணவ,மாணவிகள் பொதுவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவர்களின் வசதிக்காக பள்ளியில் கழிவறை கட்டி கொடுக்க வேண்டும் என கல்வித்துறை, பஞ்சாயத்து நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அமைப்புகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை வழங்கியதாக கூறப்படுகிறது ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ மாணவியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கோட்டை உளிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கள் பள்ளிக்கு கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும் என மாணவ மாணவியர்கள் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கழிவறை கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதி அளித்தனர் அதனை தொடர்ந்து மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் சென்றனர்.

Tags

Next Story