போதையில் 100-க்கு போன் செய்த ஆசிரியர்
ஆசிரியர் கைது
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் அரசு மருத்துவமனையில் `வெடிகுண்டு’ வைக்கப்பட்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ இரண்டு முறை தொடர்புகொண்டு மர்ம நபர் ஒருவர் `உளறல்’ மிரட்டல் விடுத்திருக்கிறார்.
உளறல் பேச்சை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக அரக்கோணம் நகரப் போலீஸார் உஷார்ப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனை முழுவதுமாக சோதனை செய்யப்பட்டது. தீவிர சோதனையில் சந்தேகத்திற்கிடமாக எந்த விதமான பொருள்களும் சிக்கவில்லை. போன் கால் `புரளி’ என்பதை உறுதி செய்துகொண்ட போலீஸார், மிரட்டல் விடுத்த நபரை தேடினர். சென்னை பழைய பல்லாவரம் பகுதியில் பதுங்கியிருந்த 49 வயதான கேசவன் என்பவர்தான் மிரட்டல் ஆசாமி என்பதை கண்டுபிடித்து, அவரைக் கைது செய்தனர். `
பொய்யான தகவல் மற்றும் வதந்தியை கிளப்பி மிரட்டல் விடுத்தது’ என 3 பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. விசாரணையில், கேசவனுக்குச் சொந்த ஊர் அரக்கோணம் நகரிலுள்ள குப்புசாமி தெருதான். இவரும், அரக்கோணம் நேதாஜி நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கேசவனிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை தட்சிணாமூர்த்தி கடனாக பெற்றுள்ளார்.
இரண்டு பேருமே தற்போது சென்னையிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைச் செய்துவருகின்றனர். கேசவன் மயிலாப்பூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் - 2 வகுப்புக்குப் பொருளாதார ஆசிரியராக பாடம் எடுக்கிறார். இந்த நிலையில், ரூ.2 லட்சத்தை நண்பர் தட்சிணாமூர்த்தி திருப்பி தராமல் காலம் தாழ்த்தியதால், இருவருக்கிடையேயும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்துதான் மதுபோதையில் இருந்த ஆசிரியர் கேசவன், நண்பனுக்கு போன் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
போதை அதிகமானதும், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் போன் செய்து மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். ``எதற்காக, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்து அப்படிச் சொன்னீர்கள்..?’’ என்று போலீஸார் கேட்டதற்கு... ``சத்தியமா 100-க்குத்தான் போன் பண்ணேன்னு எனக்குத் தெரியல, சார். மப்புல பண்ணிட்டேன். காசு தராத நண்பன் மேல இருக்கிற கோவத்துல இப்படி ஏடாகூடமா பண்ணி சிக்கிக்கிட்டேன். என் பொண்ணுக்கு இப்பத்தான் கல்யாணம் பண்ணி வெச்சேன். இப்ப நான் ஜெயிலுக்குப் போனா சொந்த பந்தம் என்னை தப்பா பேசும்’’ என்று கெஞ்சி கதறி அழுதார். ஆனாலும், `ஆசிரியர் கேசவனின் செயல் குற்றம்’ என்பதால் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.