கோவையில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு
பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள்
தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற இருந்ததன் காரணமாக இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.
அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ந் தேதி வரையிலும் 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ந் தேதி வரையும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாக இருந்ததால் 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுமாறு எழுந்த கோரிக்கைகளை அடுத்து 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்து. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளிக்கு வந்தபோது ஆசிரியர்கள் அவர்களுக்கு சாக்லெட்டுகள் வழங்கி வரவேற்றனர்.நீண்ட விடுமுறைக்கு பின்னர் நண்பர்களை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.