கொளுத்தும் வெயில் : கூலிங் பீர் விற்பனை அமோகம்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் மட்டும் சுமார் 15 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு கரூர் சாலை பகவதி பாளையம் பிரிவிலுள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. எங்கு கூட்டம் குறைந்தாலும் என்றும் சீராக விற்பனை நடைபெறும் கடையாக டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. பிறப்பு, இறப்பு, பண்டிகை நாட்கள் என அனைத்து நாட்களிலும் அமோக விற்பனையை தொடும் வகையில் டாஸ்மாக் கடைகள் தங்களின் தரம் குறையாமல் தினசரி அளவில் செயல்பட்டு அரசுக்கு வருவாயை ஈட்டித் தருகிறது. முக்கியமாக பொங்கல், தீபாவளி என்றால் 300 முதல் 400 கோடி அரசுக்கு உறுதி.
இந்த நிலையில் தற்போது கோடைகாலம் துவங்கிய நிலையில் கடந்த20 நாட்களாக வெய்யிலின் தாக்கம் சுமார் 100 டிகிரிக்கும் குறையாமல் காங்கேயம் பகுதிகளில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. எனவே பொதுமக்களின் தேவைக்காக அனைத்து பகுதிகளிலும் குளிர்பான கடைகள், கரும்பு பால், இளநீர் மற்றும் நுங்கு கடைகள் என துவங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குளிர்பானங்களுக்கு ஈடாக டாஸ்மாக் கடைகளிலும் கோடை காலத்திற்கு ஏற்ற கூலிங் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
மேலும் வாடிக்கையாளர் திருப்திக்காக அனைத்து வகை கம்பெனி சரக்குகளும் இறக்கப்படுவதாக கூறப்படுகிறது. சாதாரண நாட்களில் பீர் விற்பனையாகும் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு தற்போது பீர் பாட்டில்கள் விற்பனையாவதாகவும், இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் லாபம் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் கடை ஊழியர்களும், மதுப்பிரியர்களும் தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட மது வகைகள் இருந்தாலும் மதுப்பிரியர்கள் தற்போது வெய்யிலில் வேலை பார்த்து விட்டு வந்து கூலிங்கான பீர் பாட்டில்களை எதிர்பார்க்கின்றனர் என்றும் காங்கேயம், ஊத்துக்குளி, வெள்ளகோவில், முத்தூர், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதிகளில் இதே போன்று நாள் ஒன்றுக்கு 200 முதல் 500 பீர் பாட்டில்கள் வரை விற்பனை ஆகிறது என்றும் கடை ஊழியர்கள் மற்றும் குடிமகன்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.