திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாசிச எதிர்ப்பு தினம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாபர் மசூதி மட்டுமல்லாமல் இந்தியாவில் தற்போது பல்வேறு மசூதிகள் மற்றும் தாஜ்மஹால் ஆகியவற்றை சங்பரிவார இயக்கங்கள் குறி வைத்திருப்பதாகவும் , அவர்களின் நோக்கம் இந்தியாவில் இஸ்லாமியர்களின் அடையாளச் சின்னங்களை தகர்த்தெறிவது மட்டுமே எனவும் குற்றம் சாட்டினார். இதனை கண்டிக்கும் வகையில் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி வெல்லட்டும் மத சார்பின்மை என்ற மாநாடு எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுரையில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.