கடல் அட்டை பதுக்கிய வழக்கு: 13 பேருக்கு 3ஆண்டுகள் சிறை
கோப்பு படம்
தூத்துக்குடியில் இருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டை உள்ளிட்ட பொருள்களை இலங்கைக்கு கடத்துவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பக வனத்துறையினா் கடந்த 17.7.2007இல் திரேஸ்புரம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கடல் அட்டை, சங்குகள், நட்சத்திர மீனகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த மீராசா(49), அன்டோ(68), ரீகன்(42), கருப்புராஜ்(68), பக்கீா் மைதீன்(53), சமசுதீன்(43), அப்பாஸ்(58), பீா் மைதீன்(41), அப்துல்காதா்(51), ஜாபா்(52), ஜமால், காஜா(58), அல்போன்ஸ்(56) உள்பட 16 போ் மீது வழக்கு பதிவு செய்து வனத்துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து சுமாா் 73.5 கிலோ கடல் அட்டை, 9 குதிரை முள்ளி சங்கு, 106 ஆணை முள்ளி சங்கு, 1000 சிறிய குழிசங்கு, 32 பெரிய குழிசங்கு, 72 நட்சத்திர மீன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி 2 ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதித்துறை நடுவா் கனிமொழி விசாரித்து, 13 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். ஒருவா் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்படுகிறது. இருவா் உயிரிழந்துவிட்டனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜானகி வாதாடினாா்.