கடல்பசு பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ், கடல் பசு பாதுகாப்பு தொடர்பான சமுதாய விழிப்புணர்வு கூட்டம், தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் படி, தஞ்சை வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், மனோரா கடற்கரை பகுதியில் நடைபெற்றது.
இதில், திருநெல்வேலி அரும்பு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகள் மூலம் கடல் பசு, கடல் ஆமைகள், கடல் அட்டைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், மீனவர்களின் வலையில் சிக்கினால் உயிருடன் அவற்றை விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் வனத்துறை சார்பாக பாராட்டு சான்றிதழ், ரொக்கப் பணம் பரிசு, சேதமடைந்த வலைக்கு நிவாரணம் வழங்கப்படும் என நிகழ்வில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மீனவர்களிடம் எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து வனச்சரக அலுவலர் உறுதிமொழி வாசிக்க, அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்போம் என மீனவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகர், துணை வனச்சரக அலுவலர் சிவசங்கர், கடலோர பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமை காவலர் கோபால், மீன்வளத்துறை ஆய்வாளர் மல்லிப்பட்டினம் கெங்கேஸ்வரி, ஓம்கார் பவுண்டேஷன் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.