சொத்து வரி செலுத்தாத வணிக வளாகத்திற்கு சீல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி செலுத்தாத கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஜப்தி நடவடிக்கைக்கான நோட்டீஸ் வழங்கி வருகிறது. ஜப்தி நோட்டீஸ் வழங்கியும் சொத்து வரி செலுத்தாத பல்வேறு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஓசூர் மகாத்மா காந்தி சாலையில் உள்ள முகமது ரபிக் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் மற்றும் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்திற்கு உரிமையாளர் முகமது ரபிக் சொத்து வரியாக 74 ஆயிரத்து 850 ரூபாயை பாக்கி வைத்துள்ளார்.
இதனை செலுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தியும் அவர் சொத்து வரியை கட்டவில்லை அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் அவருக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஜப்தி நோட்டீஸ் வழங்கிய பின்னரும் அவர் சொத்து வரியை கட்டாததால் இன்று மாநகராட்சி அதிகாரிகள் அவரது வணிக வளாகத்தில் இருந்த 5 கடைகள் ஒரு தனியார் வங்கி உட்பட அனைத்திற்கும் சீல் வைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதே போல ஓசூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாத 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.