வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்; வாக்காளர்கள் தவிப்பு!
ஊட்டியில் உள்ள ஹோபர்ட் பள்ளியில் 6 மணிக்கு முன்னரே வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாக வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு உண்டானது.
ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய நீலகிரி தொகுதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. நகர்புற பகுதிகள் மட்டுமல்லாமல் ஊரகப் பகுதிகளிலும் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றது. ஒரு சிலர் பணி முடிந்து வந்து மாலை நேரத்தில் வாக்களித்தனர். இதற்கிடையே ஊட்டி கோபர்ட் பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் 6 மணிக்கு முன்னரே வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாக கூறி வாக்காளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வாக்காளர்கள் கூறுகையில், வாக்குச்சாவடி மையத்திற்கு 5:55 மணிக்கு வந்து விட்டோம் அப்போது சரியான அடையாள அட்டை இல்லாததால் திருப்பி அனுப்பினர் உடனடியாக அடையாள அட்டை 6 மணிக்கு வாக்கு சாவடி மைய வளாகத்திற்குள் வந்து விட்டோம். ஆனால் அதற்குள் வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு விட்டதாக கூறி எங்களை ஓட்டு போட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதேபோல் ஒரு சிலர் 6 மணிக்கு வாக்குப்பதிவு மைய மைய வளாகத்திற்குள் வந்திருந்தாலும், வாக்குப்பதிவு மைய அறைக்கு வரவில்லை என்று கூறி ஒரு சிலருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் அவர்களிடம் விளக்கம் அளித்து பேசுகையில், வாக்குப் பதிவு மைய வளாகத்திற்கு வரும் நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது, வாக்குச்சாவடி அறைக்கு வரும் நேரம் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒருவேளை முன்னதாக வந்து டோக்கன் வாங்கி வரிசையில் நின்றால் மட்டுமே 6 மணிக்கு பின்னர் ஓட்டு போட அனுமதிக்கப்படும் என்றனர். இதையடுத்து வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.