அரசு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு!

அரசு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு!

இரண்டாம் கட்ட பயிற்சி

மாவட்டம் முழுவதும் அரசு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு நிலைகளில் பணிகள் மேற்கொள்ளவுள்ள அலுவலா்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை சிவகங்கை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் ஆய்வு செய்தாா்.

அப்போது இதுகுறித்து அவா் கூறியதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கு ஒரே கட்டமாக வருகின்ற ஏப். 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தோ்தல் பணியாற்றுவதற்காக சிவகங்கை மாவட்டத்தில் 31-சிவகங்கை மக்களவைத்தொகுதி அனைத்து சட்டபேரவைத்தொகுதிகளிலும் மண்டல அளவிலான அலுவலா்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆகியோருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. சிவகங்கை சட்டபேரவைத் தொகுதிக்கு சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியிலும், காரைக்குடி சட்டபேரவைத் தொகுதிக்கு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி, ராமநாதன் செட்டி யாா் நகராட்சி உயா்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூா் சட்டபேரவைத் தொகுதிக்கு ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியிலும், மானாமதுரை சட்டபேரவைத் தொகுதிக்கு மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியிலும் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றது.

இதில் 1,628 வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், 1,628 நிலை-1 வாக்குச்சாவடி அலுவலா்கள், 1,628 நிலை - 2 வாக்குச் சாவடி அலுவலா்கள், 1,628 நிலை-3 வாக்குச்சாவடி அலுவலா்கள், 167 நிலை - 4 வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 6,679 போ் பங்கேற்றனா்.

வாக்குச்சாவடி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலா்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு தோ்தல் ஆணையத்தினால் தபால் வாக்குப் பதிவு முறைகளில் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்கான ஏற்படுத்தப்படவுள்ள சேவை மையங்கள் மூலம் தபால் வாக்குகளை அளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குள்பட்டு அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

வாக்குச்சாவடி மையங்களில் கைப்பேசி உபயோகிப்பதை தவிா்க்கவேண்டும். வாக்குச்சாவடி முகவா்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் வாயிலாக வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து விதிமுறைகள் தொடா்பாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Tags

Next Story