வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர் பயிற்சி வகுப்பு 

நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும்1,760 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் கட்ட பயிற்சி குறித்து தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல், மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3,260 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 13,410 அலுவலர்கள் மற்றும் கூடுதலாக மாற்று அலுவலர்கள் 2,682 பேர் என மொத்தம் 16 ஆயிரத்து 92 அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கு 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த பயிற்சி மையங்களில் கடந்த மாதம் 24-ந் தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாத 1,760 பேருக்கு நேற்று அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பயிற்சி மையங்களிலும் 2-ம் கட்ட பயிற்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் வழங்கப்பட்டு வரும் பயிற்சி குறித்தும், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு மையத்தையும் சேலம் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல், மற்றும் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள், தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து எடுத்துக்கூறினர். இதையடுத்து சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வைஸ்யா கல்லூரி ஆகிய பயிற்சி மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவது குறித்தும் கலெக்டர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், அம்மாப்பேட்டை உதவி ஆணையர் வேடியப்பன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story