54 கிலோ கஞ்சா பறிமுதல் : ஒருவர் கைது

54 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது செய்தனர்

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த குளத்தூர் பிரிவு பகுதியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தனர்.அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது உடைமைகளை சோதனையிட்டபோது ஐந்து கிலோ உலர் கஞ்சாவை விற்பனைக்காக பையில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது‌.

இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் காசாளராக பணிபுரிந்து வரும் மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி என்பதும் எல்&டி புறவழிச் சாலையில் வட மாநிலங்களுக்கு செல்லும் பொருட்களை லாரி மூலம் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. உணவு விடுதியின் மேலாளரான நாகராஜ் என்பவருடன் சேர்ந்து கருப்பசாமி வட மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளில் கஞ்சா கடத்தி வந்து கோவை புறநகர பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் மதுரையில் உள்ள ரகசிய இடத்தில் விற்பனைக்காக 50 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து கருப்புசாமியை மதுரைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் அங்குள்ள ரகசிய இடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கோவைக்கு எடுத்து வந்தனர்.

இதையடுத்து கருப்பு சாமியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரது கூட்டாளியான நாகராஜ் என்பவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கருப்புசாமியிடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நேரில் பார்வையிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர்ப்கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை குறைவதற்கு போலீசாரின் தொடர் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளே காரணம் என தெரிவித்தார்.சூலூர் பகுதிகளில் மட்டும் இந்த ஆண்டு 3000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியவர் கல்லூரிகளில் ராகிங் மற்றும் போதைப் பொருள் பயன்பாடுகளை தடுக்க போலீஸ் மற்றும் கல்லூரி மாணவர்கள் உடனான சந்திப்புகள் தொடர் நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags

Next Story