போதைப் பொருள் கடத்திய கார் பறிமுதல்; ஒருவர் கைது
தருமபுரியில் காரில் இருந்து 474 கிலோ போதைப்பொருட்களுடன் கார் பறிமுதல்; ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தொம்பரகாம்பட்டி பேருந்து நிலையத்தில் சரக்கு லாரி சாலையை கடக்க முயன்ற போது மின்னல் வேகத்தில் வந்த கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரி மீது மோதி நிற்காமல் சென்றது இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சரக்கு வாகனம் நகர்ந்து பின்னால் நின்ற ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவில் இருந்த அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவர் காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தொப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய காரை கைப்பற்றி அதில் இருந்த வாலிபரை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் அதில் அவர் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பதும் சுமார் 475 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை காரில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து குபேந்திரனை கைது செய்து அவனிடம் இருந்த சுமார் 1.67 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை கைப்பற்றி கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.