வாக்கு எண்ணும் மைய அலுவலர்கள் தேர்வு
வாக்கு எண்ணும் மைய அலுவலர்கள் தேர்வு
விருதுநகர் நாடாளுமன்ற பொது தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது அதை தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்துார், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 6 தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையமான விருதுநகரில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றெழுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள நிலையில் வரும் . ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் ஆகியோரை மூன்று கட்டமாக சீரற்ற தெரிவு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர்ஜெயசீலன் முன்னிலையில் நடந்த தேர்வில் 120 ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 120 ஓட்டு எண்ணிக்கை உதவியாளர்கள், 120 நுண் பார்வையாளர்கள் என 360 ஓட்டு எண்ணும் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு மே 27ல் நடத்தப்படும். தேர்தல் பொதுப் பார்வையாளர் வந்த பின் 2ம் கட்ட சீரற்ற தெரிவு முறையில் சட்டசபை தொகுதிக்கு தேர்வு செய்யும் பணி நடக்கும். 3ம் கட்ட சீரற்ற தெரிவு முறை தேர்வு ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைத்து அதிகாலை 5:00 மணிக்கு பார்வையாளர் முன்னிலையில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் மேசை வாரியாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தெரிவித்தார்.