வாக்கு எண்ணும் மையத்திற்கு பணியாளர்கள் தேர்வு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கான முதற்கட்ட சீரற்ற தெரிவு பணிகள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில் : மக்களவை பொதுத்தேர்தல் - 2024 கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 6 தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான விருதுநகரில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது வருகின்ற 04-06-2024 அன்று நடைபெற உள்ளது. இவ்வாக்கு எண்ணிக்கையில், வாக்கு எண்ணிக்கைக்கான மேற்பார்வையாளர்கள்/உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்கள் மூன்று கட்டமாக சீரற்ற தெரிவு முறையில் (Randomization process) தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியாளர்களை தேர்வு செய்வதற்கான முதற்கட்ட சீரற்ற தெரிவு முறையானது தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்களால் வழங்கப்பட்ட மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டது. இதில், கீழ்கண்ட விபரப்படி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள்/ உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்கள் சீரற்ற தெரிவு முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட 120 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 120 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் 120 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 360 வாக்கு எண்ணிக்கை பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பானது, 27.05.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தனித்தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன் பின்னர், தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் வரப்பெற்ற பின்பு 2ம் கட்ட சீரற்ற தெரிவு முறையில் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்வு செய்வதற்கான பணியானது தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.
அப்போது 2ம் கட்ட பயிற்சியானது, தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் தலைமையில் வழங்கப்படும். மேலும், 3ம் கட்ட சீரற்ற தெரிவு முறை தேர்வானது, வாக்கு எண்ணிக்கை அன்று (04.06.2024) வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து அன்று காலை 5.00 மணியளவில் தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் மேஜை வாரியாக தேர்வு செய்யப்படவுள்ளனர் என தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்கள்.