விக்கிரவாண்டியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி செல்பி பாயிண்ட் !
செல்பி பாயிண்ட்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10- ந்தேதி நடைபெற உள்ளது. இதில் 100 சதவீதம் வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய 'செல்பி பாயிண்ட்' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு, செல்பி எடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப் போது அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தனி தாசில்தார் ஜெயலட்சுமி, விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணா மலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.