சாலையோர சிம் கார்டு விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்

சாலையோர சிம் கார்டு விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்

சிம்.கார்டுகள்

சாலை ஓரங்களில் தற்காலிக கடைகள் மற்றும் குடைகள் அமைத்து விற்கப்படும் சிம் கார்டுகளால் வாடிக்கையாளர்களின் ஆதார் அடையாள அட்டையை முறைகேடாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

சாலையோரங்களில் சிம் கார்டுகள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் ராயல் பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், நாமக்கல் பரமத்திவேலூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி போன்ற பகுதிகளில் சிம் கார்டுகளை சாலை ஓரங்களில் விற்பனை செய்கிறார்கள். சிம் கார்ட் கம்பெனிகள் வினியோகஸ்தர்கள் மூலமாக நேரடியாக ஒவ்வொரு பகுதியிலும் அவர்கள் நிறுவனத்தின் EC சிம் கார்டுகளை கொடுத்து செல்போன் கடைக்காரர்களை சில்லரை விற்பனையாளர்களாக நியமித்துள்ளார்கள்.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) விதிமுறைப்படி சில்லரை விற்பனையளர்களே அந்த பகுதிகளில் சிம்கார்டுகளை விற்பனை செய்ய வேண்டும். அப்பகுதிகளில் சிம் கார்டுகளை விற்பனை செய்ய அங்கீகரிக்கப்படாதவர்களால் சாலை ஓரங்களில் தற்காலிக கடைகள் மற்றும் குடைகள் அமைத்து விற்கப்படும் சிம் கார்டுகளால் வாடிக்கையாளர்களின் ஆதார் அடையாள அட்டையை முறைகேடாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

மேலும், இது போன்ற முறையற்ற விற்பனையால் இப்பகுதியில் இருக்கும் சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஆகவே இதுபோன்று சட்டத்தை மீறி சாலையோரங்களில் சிம் கார்டு விற்பனை செய்பவர்களின் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலையோர சிம் கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் நாமக்கல் மொபைல் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் அசோசியேசன் மாவட்ட செயலாளர் ராகவன், நகர செயலாளர் எவரெஸ்ட் ராஜா, எருமப்பட்டி ஒன்றிய மொபைல் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் அசோசியேசன் தலைவர் செந்தில்குமார், செயலாளர் சிவச்சந்திரன், பொருளாளர் பாஸ்கர், துணைச் செயலாளர் ஆனந்த், பரமத்திவேலூர் அலைபேசி சங்கத்தின் செயலாளர் தியாகராஜன், துணைச் செயலாளர் வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர்கள் கதிரவன், மனோஜ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story