கொடிகட்டி பறக்கும் நம்பர் லாட்டரி விற்பனை : போலீசார் மவுனம்!

கொடிகட்டி பறக்கும் நம்பர் லாட்டரி விற்பனை : போலீசார் மவுனம்!

லாட்டரி விற்பனை

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக நடைபெறும் நம்பர் லாட்டரி விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் சட்ட விரோதமாக நடைபெறும் நம்பர் லாட்டரி விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில், அதிகளவு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. மதுபோதைக்கு அடிமையாவதை போல பலரும் லாட்டரி சீட்டு போதைக்கு அடிமையானார்கள். இதனால் பல குடும்பங்கள் சீரழிந்தன. இதையடுத்து கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்தார். வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டவிரோதமாக நம்பர் லாட்டரி விற்பனை தமிழ்நாட்டில் நடைபெற்று வந்தது. குறிப்பாக, எல்லையோர மாவட்டங்களில் லாட்டரி விற்பனை சட்ட விரோதமாக நடைபெற்று வந்தது. சமீப காலமாக தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத நம்பர் லாட்டரி விற்பனை சூடுபிடித்துள்ளது. மூன்று எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டுகள் 100 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதில் வெற்றியடைந்தால் லட்சக் கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறப்படுவதால் பலரும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக ஆட்டோ டிரைவர்கள், கூலித்தொழிலாளிகள் மற்றும் நடுத்தர மக்கள் கடனாளியாகி வறுமையின் உச்சத்துக்கு சென்று வருகின்றனர். ஒரு நம்பர் அடித்தால் ரூ.100, 2 நம்பர் அடித்தால் ரூ.1000, 3 நம்பர் அடித்தால் 25 ஆயிரம் என பரிசுத்தொகை அறிவிக்கப்படுகிறது. ஒரு சீட்டின் விலை ரூ.60க்கு விற்கப்படுகிறது. 4ம் நம்பர் சீட்டு ரூ.120க்கு விற்க்கப்படுகிறது. அதற்கு பரிசுத்தொகையாக ரூ 4 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த நம்பர் லாட்டரி சீட்டு கேரள மற்றும் நாகலாந்து லாட்டரி சீட்டின் அடைப்படையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. லாட்டரி குழுக்கல் 1 மணி, 3 மணி, 6 மணி, 8 மணி என நேரம் வாரியாக நடக்கிறது. இதில், மிகப்பெரிய பரிசுத்தொகை விழுந்தால் அதன் பிரச்சனை பெரியதாகி காவல்துறை வரை பஞ்சாயத்து செல்வதாக கூறப்படுகிறது. நம்பர் லாட்டரிகள் விற்பனை தூத்துக்குடியில் பல்வேறு கடைகளில் அதிகரித்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. புகையிலை, பாக்கு போன்ற போதைப் பொருளை பிடித்து குற்றவாளிகளை கைது செய்யும் போலீசார் லாட்டரி விசயத்தில் மவுனம் காப்பது வியப்பை அளிக்கிறது. லாட்டரி விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது.

Tags

Next Story