தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் கருத்தரங்கம்
தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில் உடல், மனம் மற்றும் அறிவுக்கு இணக்கமான சமநிலை பெறுதல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கல்வி நிறுனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் மா.விஜயா வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினராக சென்னை, இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின், மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை அறிவியல் துறைத்தலைவர் சி.மாதங்கி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், "கற்றுக் கொடுப்பதில் ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும், மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம். கோபத்தையும், மனஅழுத்தத்தையும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சூழலையும் தவிர்க்க வேண்டும், அதற்கு காரணமானவர்களையும் தவிர்க்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு வாழ்க்கை முழுதும் கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர் என்பதை மறுக்கவியலாது" என்றார்.
சிறப்பு விருந்தினர் தஞ்சை, இராமகிருஷ்ண மடத்தலைவர், சுவாமி விமூர்தானந்தா பேசுகையில்," விதைக்குள் விருட்சங்களை காண்பவனே நல்ல ஆசிரியன், மாணவர்களை வளர்க்கும் மாபெரும் பணி ஆசிரியரிடமே உள்ளது. மாணவனின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும் எனில் அவனது மனதை பிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும், தொய்வு வருவதற்கு முன்னே தெளிவு படுத்துவது அவசியம்,
அறிவுக்கும் பசியிருப்பதை உணர வேண்டும்" என்றார். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் வீ.வெற்றிவேல் வரவேற்றார். நிறைவாக ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் ப.ஆனந்தன் நன்றி கூறினார். விழாவை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கி.உஷா தொகுத்து வழங்கினார். இவ்விழாவில், கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.