சேலம் தாதகாப்பட்டியில் செங்காளியம்மன் மயான கொள்ளை திருவிழா
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே, சவுந்தர் நகரில் உள்ள செங்காளியம்மனுக்கு 18-வது ஆண்டாக மயான கொள்ளை திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று காலை 10.30 மணி முதல் 12 மணியளவில் சிவபூஜை நடைபெற்றது.
இன்று அமாவாசையையொட்டி, மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் மயான கொள்ளை பூஜை நடைபெறும். அப்போது பள்ளையம் எடுத்து அம்மன் காட்டேரி, மோகினி, பாவாடைராயன், பேச்சியம்மன் வேடமிட்டு மயானக் கொள்ளை செல்லுதல் நடைபெற உள்ளது. இதில் பூசாரி, பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக கொடுக்கும் ஆடு, கோழிகளை ஆக்ரோஷமாக கடித்தபடி செல்வர். தாதகாப்பட்டி கேட், அன்னதானப்பட்டி வழியாக செவ்வாய்பேட்டை மயானம் வரை இந்த ஊர்வலம் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியானது, தமிழ்நாடு அரசு கலை வளர்மணி விருது பெற்ற, பம்பை இசை கலைஞர் ஆ.பிரகாஷ் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் கல்லாவி சரவணன் சிறப்பு அம்மன் வேடம் ஏற்க உள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி ர.கோ.ரவி சாமிகள் செய்துள்ளார்.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படும். எனவே திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று, பயன்பெற வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.