சேலத்தில் ரயில் பயணிகளிடம் தொடர் வழிப்பறி: வடமாநில வாலிபர்கள் கைது
கோப்பு படம்
சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ரெயில்களில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவு பயணிகள் 3 பேரிடம் நகை, உடைமைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதுகுறித்து நகையை பறி கொடுத்தவர்கள் ஈரோடு ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த சஞ்சுராய் (வயது 32), தீப்ஜோதி (28) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 பேரும் ரெயில் பயணிகளை போலவே டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணிப்பதும், பயணிகள் அசந்து தூங்கும் வேளையில் நகையை அபேஸ் செய்ததும் தெரியவந்தது.
சம்பவத்தன்று சென்னையில் இருந்து ஈரோடு வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சக பயணிகள் போல பயணம் செய்தனர். சேலத்தை கடந்து ஈரோடு நோக்கி ரெயில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சிக்னல் பகுதியில் மெதுவாக சென்றது.
அப்போது ஒரு பயணியிடம் நகையை பறித்துவிட்டு சஞ்சுராய், தீப்ஜோதி ஆகியோர் ரெயிலில் இருந்து வெளியே குதித்துள்ளனர். அப்போது அதே பகுதியில் மெதுவாக வந்து கொண்டிருந்த 2 ரெயில்களில் ஏறி பயணிகளிடம் நகையை பறித்து விட்டு கீழே குதித்து தப்பி ஓடியதும் தெரியவந்தது. கைதான 2 பேரிடம் இருந்து 2½ பவுன் நகை மீட்கப்பட்டது.
கைதான சஞ்சுராய், தீப்ஜோதி ஆகியோர் மீது ஜோலார்பேட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.