எள் அறுவடைப் பணிகள் தீவிரம் : விலை சரிவால் விவசாயிகள் வேதனை
தஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் கரும்பு. வாழை, உளுந்து, வெற்றிலை, எள், மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இதில் எள் சாகுபடி ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களில் நடைபெறும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சாகுபடி செய்யப்பட்ட எள் அறுவடை முடிவடைந்து விட்டது. மார்கழி, தை மாதங்களில் சாகுபடி செய்யப்பட்ட எள் அறுவடை தற்போது நடந்து வருகிறது. பல இடங்களில் எள் பயிர் காய்கள் விளையும் தருவாயில் உள்ளது. எள் சாகுபடி குறிப்பாக சம்பா அறுவடை பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தஞ்சைமாவட்டத்தில் 2,500 முதல் 3 ஆயிரம் ஏக்கர் வரை எள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டு சம்பா அறுவடை நடந்த இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையாக காணப்படும் இடங்களில் எள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. எள் பயிரின் சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும். எள் சாகுபடியில் ஏக்கருக்கு 150 கிலோ முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்கும். அதன்படி இந்த ஆண்டு தற்போது நல்ல மகசூல் கிடைத்து வருகிறது.
செடியின் அடியில் இருந்து மேலாக உள்ள காயில் உள்ள விதைகள் கருப்பாக வந்தால் அறுவடை செய்ய வேண்டும். தற்போது எள் அறுவடை பணிகள் தஞ்சை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை- மன்னார்குடி சாலையில் பல இடங்களில் எள் அறுவடை செய்யப்பட்டு அதனை வயல்களிலேயே சிறிய, சிறிய அம்பாரமாக போட்டு வைத்துள்ளனர். சில நாட்களுக்குப்பிறகு அம்பாரத்தை பிரித்து செடிகளை தட்டி எள்ளை தனியாக எடுப்பது வழக்கம்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு சாகுபடி செய்த எள் நன்றாக விளைந்திருந்த நிலையில் மகசூலும் நன்றாக இருந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ எள் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது எள் சாகுபடியாகி அதிக அளவில் வரத்து உள்ளதால் விலை குறைந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ எள் ரூ.125 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது என்றனர். எள் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.