சேலம் மக்கள் நீதிமன்றத்தில் 4,622 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றம்
சேலம் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகின்றது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் சமரச தீர்வு மையம் என்னும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், சேலம், ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி ஆகிய 7 கோர்ட்டுகளில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கு, குடும்பம் மற்றும் சொத்து பிரச்சினை, காசோலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 998 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. முடிவில், 4,622 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தீர்வு தொகையாக ரூ.50 கோடியே 53 லட்சத்து 16 ஆயிரத்து 652 பெறப்பட்டது.