செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் கழிவுகள் - குடிநீர் விஷமாகும் அபாயம்

செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் கழிவுகள் -  குடிநீர் விஷமாகும் அபாயம்

கழிவுகள் 

செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலைக் கழிவுகள், குடியிருப்பு கழிவுநீர் கலப்பதால் ஏரிநீர் மாசடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் நீர் விஷமாகும் ஆபத்து உள்ளது என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னை குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் 6,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கரை நீளம் 8.30 கி.மீ., செம்பரம்பாக்கம் ஏரி 3.645 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்மட்ட உயரம் 24 அடி. ௧௦ மதகு கொண்டது.

ஏரியின் மேற்புற பகுதியில் ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இதுதவிர ஏரியின் மேற்புறப் பகுதியில் காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, கீவளூர், தண்டலம், மேவளூர்குப்பம், செம்பரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் மேற்கண்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் பல ஆண்டுகளாக கலந்து வருகிறது.

மேலும், தொழிற்சாலைகளின் திடக்கழிவுகள் காலி நிலத்தில் கொட்டி எரிக்கப்படுகின்றன. இவையும் மழைக் காலத்தில் நீரில் அடித்து வரப்பட்டு கலப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிநீர் மாசடைந்து வருகிறது. 'இதேபோக்கு நீடித்தால், எதிர்காலத்தின் ஏரியின் நீர் மிக மோசமான நிலைக்கு சென்றுவிடும். மக்களின் குடிநீர் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிநீரில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்' என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story