சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்.
பூந்தமல்லி சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து பாரிவாக்கம் சாலை சந்திப்பு செல்லக்கூடிய சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் அரசு பேருந்துகளும் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்களும் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து பாரிவாக்கம் சாலை சந்திப்பை அடைய இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் பணிகள் நடந்து வரும் நிலையில் மழை நீர் செல்லும் கால்வாய் ஒரு பகுதி மூடப்பட்டு இருப்பதால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக சாலைகளில் ஆறாய் தேங்கி நிற்கிறது இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மழை நீரில் செல்வது போல் ஊர்ந்து செல்கிறது.
மேலும் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களும் தேங்கியுள்ள கழிவு நீரில் நடந்து செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். அது மட்டுமின்றி கழிவுநீர் வெளியேறும் கால்வாய் முறையாக இல்லாததால் அதன் மீது நடந்து சென்று தவறி விழுந்து உயிரிழப்பும், காயமும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து இந்தப் பகுதியில் கழிவுநீர் வெளியேறி வருவது வாடிக்கையான ஒன்றாகி விட்டதாகவும் இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்