அரசுபள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்: சஸ்பென்ட் செய்து உத்தரவு
நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தி பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி கடந்த 28 ம் தேதி பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை பள்ளிக்குள் புகுந்து அடிக்க பாய்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சக ஆசிரியர்கள் ஆசிரியர் ராமமூர்த்தியை பள்ளியின் வகுப்பறையில் உள்ளே வைத்து பூட்டினர், இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆசிரியர் ராமமூர்த்தியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராமமூர்த்தி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுத புகாரின் அடிப்படையில் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.