கோடை வெயிலில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு நிழற்குடைகள்
சேலத்தில் கோடை வெயிலில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு ரூ.2 லட்சத்தில் நிழற்குடைகள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பயன்பெறும் வகையில் சேலம் களஞ்சியம் அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சத்தில் 90 நிழற்குடைகள் சேலம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு சேலம் மாநகராட்சி செயற்பொறியாளரும், அறக்கட்டளை நிறுவனருமான பழனிசாமி தலைமை தாங்கி, கலெக்டர் பிருந்தாதேவியிடம் நிழற்குடைகளை வழங்கினார். இது குறித்து செயற்பொறியாளர் பழனிசாமி கூறும் போது,‘வெயில் காலங்களில் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சிரமத்தை போக்க அறக்கட்டளை சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் நிழற்குடைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த குடைகளை பேரிடர் காலங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்றார். இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் பாலமுருகன், செயலாளர் ஹரிக்குமார், பொருளாளர் ராம்பிரபு, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.