சாந்திகிரி ஆசிரம வெள்ளி விழா: அமைச்சா் மனோ.தங்கராஜ் பங்கேற்பு
செய்யூா் சாந்திகிரி ஆசிரம வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியில் குருவின் சிலை திறப்பு, பிராா்த்தனை மண்டபத்துக்கான பூமி பூஜை, இலவச மருத்துவ முகாம், மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செய்யூா் சாந்திகிரி ஆசிரம வெள்ளி விழா 2-ஆம் நாள் விழா நிகழ்ச்சிகளுக்கு கேரள மாநில உணவுத் துறை அமைச்சா் ஜி.ஆா்.அணில் தலைமை வகித்தாா். ஆசிரம தலைமை பீடாதிபதி சிஷ்ய பூஜிதா அமிா்த ஞானதபஸ்வினி பூஜைகளை செய்தாா். மக்கள் நலம் என்ற இலவச சித்த மருத்துவ முகாமை திரைப்பட நடிகா் தலைவாசல் விஜய் தொடங்கி வைத்தாா்.
முகாமை சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தியது. கல்லூரி முதல்வா் டி.கே.செளந்திரராஜன், துணை முதல்வா் பி.ஹரிஹரன் ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுவினா் 500-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனா்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பேசும்போது, தமிழகம் சிறந்த ஆன்மிக பாராம்பரியம் கொண்டது. திருவள்ளுவரும், 18 சித்தா்களும் உலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.
வேதாந்தம், ஆன்மிக கோட்பாடுகள் பற்றி பேசும்போது, நமது தமிழகத்தை குறிப்பிடாமல் இருக்க முடியாது. கடவுள் மனித இதயத்தில் இருக்கிறாா். ஆன்மிக கொள்கைகளின் கருத்துகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், ஏவிஏ குழும நிறுவனங்களின் தலைவா் ஏ.வி.அனூப், ஆசிரம பொது செயலா் குருரத்தினம் ஞான தபஸ்வி, சுவாமி சைதன்யா, சுவாமி ஸ்நேகாத்மா, பிரம்மகுமாரிகள் நிா்வாகி ஜான்சி உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆசிரம நிா்வாகிகளும், விழாக்குழுவினரும் செய்திருந்தனா்.