சேதுபாவாசத்திரத்தில் இயற்கை உரத்துக்காக போடப்படும் செம்மறி ஆடுகள்
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் இயற்கை உரத்துக்காக செம்மறி ஆட்டுக் கிடை போடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் இயற்கை உரத்துக்காக செம்மறி ஆட்டுக் கிடை போடப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 3,000 செம்மறியாடுகள் கொண்டு வரப்பட்டு வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் டெல்டா குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவர்.
இந்த காலக்கட்டத்தில் இது போன்ற வயல்களில் புற்கள் முளைத்து வளரும். அப்போது வயல்களில் ஆட்டு மந்தைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இரவு ஏதாவது ஒரு வயலில் ஆடுகள் தங்க வைக்கப்படும். இதற்கு ஆட்டுக் கிடை போடுவது என்று பெயர். மண் வளத்தை உயர்த்தும் என்பதால் ஆட்டுகிடைக்கு விவசாயிகளின் ஆதரவும் அதிகம் இருக்கிறது. இப்படி ஆட்டுக்கிடை போடுபவர்கள் இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, அதனுள்ளே ஆடுகளை அடைத்து விடுகின்றனர். இப்படி பட்டியில் அடைப்பதால் ஆடுகளின் சிறுநீரும் புழுக்கைகளும் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கும். இப்படி கிடை போடுவதற்காகக் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வரும் ஆடு கிடை போடுபவர்கள், விவசாயப் பணிகள் தொடங்கும் வரை இங்கேயே தங்கி விடுகின்றனர்.
இப்போது சேதுபாவாசத்திரம் பகுதியில் சாகுபடி பணிகள் முடிந்து விட்ட நிலங்களில் ஆட்டுக்கிடை போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது தென்னந்தோப்புகளுக்கும் தென்னை விவசாயிகள் ஆட்டுகிடை போட தொடங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட செம்மறியாடுகள் அங்குபட்டி அமைத்து வயல்களில் மேய்ச்சல் காட்டி வருகின்றனர்.
ஆடுகளைக் கிடை போடுவதால் வயலுக்கு தேவையான இயற்கை உரம் கிடைத்து விடுகிறது. அடுத்த சாகுபடியின் போது, அதற்கான பலன் அதிகளவில் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பட்டி போடுபவர்களுக்கு ஆடுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் ஒரு இரவுக்கு ரூ.500 முதல் 2000 வரை கூலியாக வழங்கப்படுகிறது.
பகலில் வயலில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விடுவதால் அவற்றின் தீவன செலவும் மிச்சம், இரவில் வயலில் தங்க வைக்கப்படுவதால் வருமானமும் உண்டு என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு வளர்ப்பு விவசாயிகள் தற்போது இதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.