சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமாள் குடி கொண்டிருக்கும் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தளமாகவும், விநாயகப் பெருமான் முருகப்பெருமானை வணங்கும் தளமாகவும் விளங்குகிறது. நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்கு உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்ரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி (பேழைக்குள்) உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.
உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் சாமியிடம் பூ கேட்டு பூ கொடுத்த பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தர்களின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது நவீன வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது. துப்பாக்கித் தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. மண் வைத்து பூஜிக்கப்பட்ட போது ரியல் எஸ்டேட் தொழில் அசுர வளர்ச்சி அடைந்து நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்ட போது சுனாமி ஏற்பட்டு வெள்ளத்தால் ஏராளமானோர் மடிந்ததாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த முறை பிப்ரவரி மாதம் 09 தேதி முதல் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மகாராஜா (வயது 45) என்பவரின் கனவில் தோன்றிய நிறைபடி நெல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் தாராபுரம் நாச்சிமுத்துப்புதூர் பகுதியைச் சேர்ந்த சபாபதி (வயது 48) என்பவர்கள் கனவில் உத்தரவு பொருளாக வேல் வந்துள்ளது. இதை அடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. மீண்டும் மீண்டும் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் வேல் வினைகளை தீர்க்குமா? சிவன்மலை உத்தரவு பெட்டிக்குள் இதற்கு முன்பு மூன்று முறை வேல் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. 05.03.2019ஆம் ஆண்டு வேல் வைத்து பூஜை செய்யப்பட்டது.
அதன் பிறகு 06.10.2022-ம் தேதி திருப்பூர் குமார் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் கனவில் ஆண்டவன் உத்தரவாகி இரண்டாவது முறையாக வேல் வைக்கப்பட்டது. பின்னர் 28.02.2023 தேதி சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் கனவிலும் ஆண்டவன் தோன்றி வேல் வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டதாகவும் இதை அடுத்து தற்போது இன்று நான்காவது முறையாக மீண்டும் வேல் வைத்து உத்தரவாகி உள்ளதால் பக்தர்கள் என்ன நடக்கும் என ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும், வேலுண்டு வினையில்லை என்ற மந்திரத்திற்கு தகுந்தார் போல் வினைகளை வேரோடு அழித்து, மக்களுக்கு துணையாக சிவன்மலை முருகப்பெருமான் இருப்பதாக உணர்த்துகிறார் என்று பக்தர்களும் மக்களும் எண்ணுகின்றனர்.