பள்ளி வாகன தரம் ஆய்வில் உடைந்து விழுந்த படிக்கட்டால் அதிர்ச்சி
ஆவடியில் பள்ளி வாகன தரம் ஆய்வில் உடைந்து விழுந்த படிக்கட்டால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆவடி, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, அடுத்த மாதம் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் தரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து சார்பில், திருவள்ளூர் ஆர்.டி.ஓ., கற்பகம் தலைமையில் பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.ஸ்ரீதரன், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் காவேரி உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஆவடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 65 பள்ளிகளில் இருந்து, 395 வாகனங்கள் வந்திருந்தன. குறிப்பாக அவசர கால கதவுகள், முதலுதவி பெட்டி, பேருந்து படிக்கட்டுகள் உயரம், திடீரென 'பிரேக்' பிடித்தால் ஏற்படும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.
இதில், அவசர காலத்தில் வெளியேற முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை அகற்ற, ஆர்.டி.ஓ., கற்பகம், உத்தரவிட்டார். மேலும், அந்த வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆய்வின்போது, தனியார் பள்ளி வேன் படிக்கட்டு ஒன்றில், திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் கால் வைத்து சோதனை செய்தபோது, படிக்கட்டு உடைந்து விழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 'இதையே இன்னைக்கு தான் திறந்து பாக்குறீங்களா?' என, ஓட்டுனரை அதிகாரிகள் கடிந்து கொண்டனர். இதையடுத்து அந்த வாகனம், உடனடியாக நிராகரிக்கப்பட்டது.