திருப்பூர் புதியபேருந்து நிலையத்தில் கடைகள் மூடிகிடக்கும் அவலம்
மூடி கிடக்கும் புதிய கடைகள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி, முதல்வர் திறந்து வைத்த வணிக வளாகம் திறக்கப்படாமல் வீணாக கிடக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், பி.என்., ரோட்டில் உள்ள புதிய பஸ் பேருந்து நிலையம் முன்புறம் 31 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டுமா னப் பணி நிறைவு பெற்று, கடந்த 5ம் தேதி திறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், கோவை, மைசூர், மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய பேருந்துகள் அங்கு இயக்கப்பட்டு வருகிறது.
அங்குள்ள இந்த வளாகம் புதிய வடிவமைப்பில் 25 வணிக வளாக கடைகள் மற்றும் தரைத் தளத்தில் வாகன பார்க்கிங் வளாகத்துடன் அமைந்துள்ளது. பல்வேறு வசதிகளுடன் இந்த வளாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வணிக வளாகம் கட்டி முடித்து திறக்கப்பட்ட நிலையிலும், இதில் கடைகள் திறக்கப்படாமல் வீணாகக் கிடக்கிறது, 25 கடைகளுக்கு டெபாசிட் தொகையாக 10 லட்சம் ரூபாய் ஏலம் விரும்புவோர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். கட்டுமானப் பணி நிறைவடைந்த நாள் முதல் இவற்றுக்கான டெண்டருக்கு அழைப்பு விடுத்தும், இது வரை யாரும் ஏலம் கோர முன் வராத காரணத்தால், பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வருகிறது.
இன்று 5-வது முறையாக டென்டருக்கு அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் மீண்டும் 20 நாட்களுக்குப் பிறகு டெண்டர் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வணிகவளாகம் தற்பொழுது வீணாகி வருகிறது.