அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு - மகனுக்காக தாய் கோரிக்கை
தாயுடன் பாக்யராஜ்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேகே. கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பெருமாள்- சரோஜா தம்பதியினரின் மகன் பாக்யராஜ் (40). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு 15 வருடங்களுக்கு முன்பு செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி தருண் மற்றும் நித்திகா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு பாக்யராஜிற்கு லேசான கை நடுக்கம் ஏற்பட்டுள்ளது அதன் பிறகு காலப்போக்கில் சிறிது சிறிதாக நடுக்கம் அதிகமாகி தற்போது எழுந்து கூட நிற்க முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பாக்யராஜின் தாயார் சரோஜா பல இடங்களில் மருத்துவமும் பார்த்து உள்ளார் இந்த நிலையில் பாக்கியராஜிற்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் சில வருடங்கள் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் அதற்குரிய மாத்திரைகளை சாப்பிட்டால் மட்டுமே அவருக்கு சுய நினைவு வரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக பாக்யராஜின் மனைவி செல்வி அவரை ஒன்பது வருடங்களுக்கு முன்பே விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் பாக்யராஜ் எழுந்து கூட நிற்க முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார். மேலும் பாக்கியராஜ் உயிர் பிழைக்க வைக்கும் மாத்திரைகள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மட்டுமே கிடைக்கிறது. இதற்காக திருப்பத்தூரில் அந்த மாத்திரை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் பாக்யராஜ் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மேலும் இந்த மாத்திரையை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட வேண்டும் இல்லையென்றால் சுயநினைவு இழந்து இறந்த பிணம் போல் இருப்பதாகவும் பாக்யராஜ் தெரிவித்தார். மேலும் 10 வருட காலமாக வீட்டிலேயே படுத்த படுக்கையாகவும் நாற்காலியில் அமர்ந்தபடியும் இருப்பதால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு துர்நாற்றம் வீசும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றை ஒரே இடத்தில் கழிப்பதாகவும் அதனை நான்தான் வாரி கொட்டுவதாகவும் தாயார் சரோஜா ஆதங்கம் தெரிவித்தார் மேலும் எந்த ஒரு ஆதரவும் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் தன் மகன் இறப்பதற்குள் தனது மகனுக்கு மருந்து மாத்திரைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது அவருக்கு உண்டான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.