சுருக்கு மடி வலை அடிதடி: தரங்கம்பாடி தாலுகா மீனவர்கள் ஊர்மறியல்

சுருக்கு மடி வலை அடிதடி: தரங்கம்பாடி தாலுகா மீனவர்கள் ஊர்மறியல்

மீனவர்கள்

கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தரங்கம்பாடியை சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்த பன்னீர் மகன் சண்முகவேல்.42. என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 9 மீனவர்கள் இன்று காலை 8 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

காலை புதுப்பேட்டை மீனவ கிராமத்திற்கு கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க கடலில் வலையை இறக்கியபோது அங்கு சின்ன சுருக்குவலை பொருத்திய 3 பைபர் படகுகளில் வந்த பூம்புகார் மீனவர்கள் நாங்கள் பார்த்த மீனை நீங்கள் எப்படி பிடிக்கலாம் எனக் கூறியதால் இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டுள்ளது. பூம்புகார் மீனவர்கள் தரங்கம்பாடி

மீனவர்களை தாக்கி, படகின் மீது மோதி, வலைகளை சேதப்படுத்தியதாக தரங்கம்பாடி மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த மோதலில் காயமடைந்த தரங்கம்பாடியை சேர்ந்த பன்னீர் மகன் சதீஷ்குமார்.31, செல்லதுரை மகன் நித்திஷ்.24. ஆகிய இருவரை சக மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தரங்கம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தனர். இதில் சதீஸ்குமார் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் பூம்புகார் மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களை தாக்கியுள்ளனர். சுருக்கு வலையால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது அதனை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் தாக்குதல் நடத்திய மீனவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தகராறில் காயம் அடைந்த பூம்புகார் மீனவர்களும் பூம்புகார் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு கிராம மீனவர்களிடையேயான தகராறு குறித்து தரங்கம்பாடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா மீனவர்கள் தாக்குதல் நடத்திய மீனவர்களை கைது செய்யும் வரை ஊர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Tags

Next Story