எஸ்ஐ வேலை வாங்கித் தருவதாக மோசடி - எஸ்.எஸ்.ஐ உட்பட இருவர் கைது

எஸ்ஐ வேலை வாங்கித் தருவதாக மோசடி - எஸ்.எஸ்.ஐ உட்பட இருவர் கைது

சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முரளிதரன் 

எஸ்ஐ வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் நல்லூர் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி , திம்மன்குத்து, தப்பட்டைகிழவன் புதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரது மகன் பிரசாந்த் (22). இவர் காவல்துறையில் பணிக்கு முயற்சித்து வந்துள்ளார். இவரது உறவினர் ரமேஷ் என்பவர் மூலம் குட்டி என்கிற ஜெயராஜ் (42) அறிமுகமாகியுள்ளார். பிரசாந்திற்கு ஜெயராஜ் காவல்துறையில் எஸ்.ஐ பணி பெற்று தருவதாக கூறியுள்ளார். இதற்காக 25 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளனர். முதற்கட்டமாக 20 லட்ச ரூபாயும் , 2ஆம் தவணையாக 5 லட்ச ரூபாயும் பிரசாந்த் ஜெயராஜிடம் வழங்கியுள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட ஜெயராஜ் , திருப்பூர் மாநகரில் நல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ள முரளிதரன் ( 52 ) மூலம் வேலை பெற்று தருவதாக கூறியுள்ளார். பிரசாந்திடம் பெற்ற பணத்தை ஜெயராஜ் , அவருடைய நண்பர் கிருஷ்ணராஜ் மற்றும் நல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோரிடம் பங்கிட்டுள்ளனர். உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை பிரசாந்த் தெரிந்து கொண்டுள்ளார்.

இது குறித்து கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று குட்டி என்கிற ஜெயராஜ் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள கிருஷ்ணராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story