சேலம் அருகே டிவி மெக்கானிக்கிற்கு அரிவாள் வெட்டு
கோப்பு படம்
ஜலகண்டாபுரம் அருகே, சர்வீஸ் சென்டருக்குள் புகுந்த மர்ம நபர்கள், டிவிமெக்கானிக்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜலகண்டாபுரம் அடுத்த ஆவடத்தூர் சத்யா நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை (50).டிவி மெக்கானிக்கான இவர், அதே பகுதியில் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார்.
இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், அண்ணாமலை கடையில் வேலை செய்துகொண்டு இருந்தார். அப்போது டூவீலரில் வந்த இரு வாலிபர்கள், கடைக்குள் புகுந்து அண்ணாமலையை அரிவாளால் தலை, கை மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். அண்ணாமலை வலியால் அலறித் துடித்தார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் வாலிபர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர். அண்ணாமலையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.