வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி பட்டு விவசாயிகள்
சேலத்தில் வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி பட்டு விவசாயிகள் உதவி இயக்குனரிடம் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பட்டு வளர்ப்பு விவசாயிகள் பலர் நேற்று அணைமேடு பகுதியில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பழனிசாமியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள் உள்ளோம். பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பட்டுச்செடி வளர்த்து வருகிறோம். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானவர்கள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக வீரியம் இல்லாத பட்டு புழுக்கள் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 மாதமாக தட்ப வெட்ப நிலை மாற்றத்தாலும், மழை இல்லாத காரணத்தாலும் வறட்சியால் பட்டுபுழு உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பட்டு புழுக்கள் அனைத்தும் வெளியில் எடுத்து கொட்டி அழித்து உள்ளோம். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே பட்டு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பழனிசாமியிடம் கேட்ட போது, ஓசூரில் உள்ள பட்டு விதை கூட்டில் தரமான புழுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் அதிகம் வெயில் அடித்ததால், பட்டு புழுக்கள் வீரியம் இல்லாமல் போனது. எனவே பாதிக்கப்பட்ட பட்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உயர் அதிகாரிகளிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.