திருவேங்கடத்தில் அட்டகாசம் செய்யும் ஒற்றை ஆண் குரங்கு
குற்றாலம் பகுதி யில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சரக்கு லாரியில் ஆண் குரங்கு ஒன்று திருவேங்கடத்திற்கு வந்தது. அந்த குரங்கு அக்ரஹாரம் பகுதி, பஸ்நிலையம், மெயின் பஜார், பழைய பஞ்சாயத்து ஆபீஸ் தெரு போன்ற பகுதிகளில் சுற்றி திரிகிறது. ஆண் குரங்கு இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து சமையலுக்காக வைத்திருந்த காய்கறிகளை எடுத்து செல்வதுடன், கடைகளில் பொருட்களை சிறிது தின்றுவிட்டு கீழே கொட்டி விடுகிறது. வீட்டில் புகுந்த குரங்கை துரத்தினால் பெண்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்துகிறது.
வீட்டு தோட்டங்களில் தென்னை மரங்களில் ஏறி இளநீரை பறித்து கீழே போட்டு வீணாக்குகிறது. பப்பாளி, கொய்யாபழங் களை பறித்து போடுகிறது. மாடியில் காய வைத்துள்ள துணிகளை கிழிப்பதுடன், கொடிகளில் தொங்கி ஆடுகிறது.நேற்று பஸ்நிலையம் அருகிலுள்ள ஒரு வீட்டின் ஒதுக்குப்புறத்தில் தெரு நாய் 6 குட்டிகள் போட்டுள்ளது. அதில் 5 குட்டிகளை குரங்கு கொன்றுவிட்டது. மீதமுள்ள ஒரு குட்டியை காப்பாற்ற அந்த நாய், குரங்குடன் சண்டையிட்டு தாக்கியது.
தெருக்களில் விளையாடும் சிறு குழந்தைகளை குரங்கு துரத்துகிறது. அப்போது பயந்து ஓடும் போது கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே திருவேங்கடம் பகுதியில் பொதுமக்களை யும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வரும் ஒற்றை ஆண் குரங்கை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடவேண்டுமென பொதுமக் களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.