ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம்

பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து கபிலர்மலையில் உள்ள சந்தை மைதானத்தை கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற நிர்வாகம் தான் பராமரித்து வருகிறது. தைப்பூசத் தேர் திருவிழாவின் போது கடைகள் அமைப்பதற்கும் கிராம ஊராட்சி மூலம் தான் ஏலம் விடப்பட்டு வருகிறது.

மேலும் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 49 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்கப்பட்டு தரையில் சிமெண்ட் கற்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அதில் 6 கடைகள் கட்டப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகம் தான் நிர்வாகம் செய்து வருகிறது. ஆனால் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் பெயரில் தான் அந்த இடம் உள்ளது எனவும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தான் நிர்வாகம் செய்யும் என தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து நேற்று கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேலு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கபிலர் மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபிரசாத், கபிலர் மலை ஒன்றிய குழு தலைவர் ரவி மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஜேடர்பாளையம் போலீசார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபிரசாத் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி பத்து நாட்களில் சிறப்பு கூட்டம் நடத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். அதனையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கபிலர்மலை பகுதிகளில் சிறித் நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story