சிவகாசி : ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.7.29லட்சம் பறிமுதல்
பறிமுதல் செய்த பணத்துடன் அதிகாரிகள்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து விருதுநகா் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றால்,பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதுபோல் வாக்காளர்களுக்கு வழங்கப்பட கொண்டு செல்லப்படும் பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது
. இந்நிலையில் சிவகாசி அருகே பூலாவூரணி,கரும்மன்கோயில் ரோட்டில் பறக்கும் படை அதிகாரி சுமதி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டூவீலரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அந்த டூவீலரில் ரியல் எஸ்டேட் அதிபர் சிவகாசி ராஜதுரை நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மலைமுருகன்(27) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.7 லட்சத்து 29 ஆயிரம் கொண்டு வந்தது தெரிய வந்தது.இதன் காரணமாக பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வடிவேலுவிடம் ஒப்படைத்தனர்.இதன் பின்னர் உரிய ஆவணத்தை காண்பித்து பெற்று செல்லுமாறும் அறிவுறுத்தினர்.தொடர்ந்து அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.