தோல்வி பயத்தால் கொமதேக வேட்பாளர் குறித்து அவதூறு - ஈஸ்வரன் எம்.எல்.ஏ

எதிர்க்கட்சிகள், தோல்வி பயத்தால் எங்கள் வேட்பாளர் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 2008ம் ஆண்டு கொமதேக துவங்கப்படாத காலத்தில், அவர் பேசியுள்ளதாக கூறி, ஒரு வீடியோ குறித்து கடந்த 2018ம் ஆண்டு ஈரோடு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர் பேசியது உண்மையில்லை என கோர்ட் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இப்போது மீண்டும் திரித்து தயாரிக்கப்பட்ட வீடியோவை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம் என ஈஸ்வரன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில், சூரியமூர்த்தி போட்டியிடுகிறார். இதையொட்டி, தலைமை தேர்தல் பணிமனை அமைப்பதற்கான கால்கோள் விழா, நாமக்கல் நகரில் சேலம் ரோட்டில் நடைபெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். லோக்சபா எம்.பி. சின்ராஜ், வேட்பாளர் சூரியமூர்த்தி, கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேர்தல் பணிமனை கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். திரளான திமுக மற்றும் கொமதேக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பின்னர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது... கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பார்லி. தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து, நாமக்கல் தொகுதியில் கொமதேக சார்பில் சின்ராஜ் போட்டியிட்டு, 2.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லை. கடந்த இரண்டரை ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான பொதுமக்கள் தமிழக அரசின் நலத்திட்டங்களால் பயன் அடைந்துள்ளனர்.

குறிப்பாக நாமக்கல் மாவட்டத்திற்கு மிக அதிக அளவில் நலத்திட்டங்கள் கிடைத்துள்ளது. அதனால் இந்த முறை மேலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி வெற்றிபெறுவார் என்பது உறுதியாகிவிட்டது. இதை பொறுக்க முடியாது எதிர்க்கட்சிகள், தோல்வி பயத்தால் எங்கள் வேட்பாளர் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 2008ம் ஆண்டு கொமதேக துவங்கப்படாத காலத்தில், அவர் பேசியுள்ளதாக கூறி, ஒரு வீடியோ குறித்து கடந்த 2018ம் ஆண்டு ஈரோடு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது அவர் பேசியது உண்மையில்லை என கோர்ட் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இப்போது மீண்டும் அதே திரித்து தயாரிக்கப்பட்ட வீடியோவை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம். எளிமையான, விவசாய குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர் சூரியமூர்த்தி அனைத்து ஜாதி, மதத்தினரிடமும் சகஜமாக பழகும் தன்மையுடையவர்.

கடந்த 5 ஆண்டுகளாக நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக எம்.பி. சின்ராஜ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஆகிய நான் எப்படி அனைத்து மக்களுக்கும் ஜாதி, மதம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றோமோ, அதைப்போல் சூரியமூர்த்தியும் சிறப்பாக பணியாற்றுவார் என்பதை உறுதி கூறுகிறேன். எனவே வாக்காளர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story