பெண் கழுத்து அறுத்து படுகொலை!

குடியாத்தம் அருகே பெண் கழுதறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உண்டு. மூத்த மகள் கவிதா, திருமணமாகி கணவருடன் ஈரோட்டிலும், மூன்றாவது மகள் ஷர்மிளா (29), திருமணமாகி கணவருடன் சென்னை பட்டாபிராமிலும் வசித்து வருகின்றனர். இரண்டாவது மகள் தீபா (33). இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு நிர்மல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு கணவரை தீபா விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து தீபா பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். தற்போது ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று தீபா தனக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் உள்ளதாகவும், அவர் படிக்க புத்தகங்கள் தருவதாக கூறியுள்ளார், ரயிலில் சென்று விட்டு இரவில் வந்து விடுகிறேன் என தனது தாயார் சிவகாமியிடம் கூறி விட்டு அன்று மதியம் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரயிலில் குடியாத்தம் வந்துள்ளார். பின்னர் மாலை 5 மணி அளவில் தாயார் சிவகாமிக்கு போன் செய்து குடியாத்தம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு தீபாவை அவரது பெற்றோர்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் சிவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து தீபாவின் பெற்றோர்கள் கடந்த 16-ந் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் மகள் காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் தீபா பயன்படுத்திய செல்போன் எண்ணிற்கு கடைசியாக பேசியவர்களின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா நாகல்ஆலத்தூர் பகுதியை சேர்ந்த குமார் மகன் ஹேமந்த்ராஜ் (25) என்பவருடன் பலமுறை போனில் பேசியது தெரிய வந்தது. அதன்பேரில் புளியந்தோப்பு போலீசார், நேற்று குடியாத்தம் போலீசார் துணையுடன் ஹேமந்ராஜை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஹேமந்த்ராஜ் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை செய்துள்ளார். அதேப்பகுதியில் தீபா செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது. இந்தநிலையில் ஹேமந்த்ராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தீபா அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். தீபாவுக்கு தன்னைவிட 8 வயது அதிகம் என்பதால், ஹேமந்தராஜ் திருமணத்திற்கு மறுத்து வந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து தீபா வற்புறுத்தி வந்ததால் கடந்த 14-ந் தேதி குடியாத்தம் வருமாறு அழைத்துள்ளார். அதை நம்பி குடியாத்தம் ரயில் நிலையத்திற்கு வந்த தீபாவை அருகில் உள்ள நெட்டேரி மலைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது தீபா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த்ராஜ் திடீரென தீபாவை அங்கிருந்து தாக்கி கீழே தள்ளி கையில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த செல்போனை அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாது போல் சென்று விட்டது தெரிய வந்தது. அதன்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் உதவியுடன், புளியந்தோப்பு போலீசார் நெட்டேரி மலை பகுதிக்கு ஹேமந்த்ராஜை அழைத்துச்சென்று பார்த்தபோது அங்கு தீபாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் தீபாவின் கழுத்தை அறுத்த கத்தி மற்றும் தீபாவின் பை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து ஹேமந்த்ராஜை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். ஹேமந்த்ராஜ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி அருகே ரயிலில் இளம்பெண்ணை தாக்கி கீழே தள்ளிவிட்டு செல்போன் மற்றும் செயின் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story